தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் வீடுகளுக்கு பைப் லைன் கொடுக்கும் முன் அவசர கதியில் சாலைப்பணி

ஸ்பிக்நகர், மார்ச் 15: தூத்துக்குடி அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் வீடுகளுக்கு தண்ணீர் பைப் லைன் கொடுப்பதற்கு முன்பாக அவசரத்தில் ரோடு போடப்படுகிறது. தூத்துக்குடியை அடுத்துள்ளது அத்திமரப்பட்டி. இங்கு விவசாயிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்து 6 மாதத்திற்குள்ளாக 4வது பைப் லைன் திட்டத்திற்கு குழாய்கள் அமைப்பதற்க்காக ரோடுகளில் குழிகள் தோண்டப்பட்டது. அப்போது போடப்பட்ட குழாய்களின் மூலம் நீர்தேக்க தொட்டிகளுக்கும் சாலையின் அருகே அமைந்துள்ள சிறிய தெருக்களில் உள்ள வீடுகளுக்கும் பைப் லைன் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அத்திமரப்பட்டி ஊரில் உள்ள மெயின் ரோட்டிற்கு அருகே உள்ள வீடுகளுக்கு பைப்லைன் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் திடீரென்று அவசர கதியில் போடப்படும் சாலையை போன்று அத்திமரப்பட்டியிலும் ரோடு போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. மெயின் ரோட்டிற்கு அருகேயுள்ள வீடுகளுக்கு பைப் லைன் கொடுக்கும்போது புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலையை தோண்ட வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே, சாலை அமைத்து 6 மாதத்திற்குள் தோண்டப்பட்டது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக வீடுகளுக்கு பைப் லைன் கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இப்போது சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டால் பைப் லைன் கொடுக்கும் போது சாலையை உடைக்க நேரிடுமே என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலை அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே திட்ட மதிப்பீடு என்று போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டுகளில் போடப்பட்டுள்ள தொகையினை பார்த்து இவ்வளவு செலவு செய்தும் பிரயோஜனம் இல்லாமல் போகப்போகிறதே என்று பொதுமக்கள் அங்கலாய்த்து வருகின்றனர்.

இதுகுறித்து அத்திமரப்பட்டி விவசாயி பால்துரை தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் வீடுகளுக்கு பைப்லைன் கொடுக்கப்படவில்லை. இப்போது சாலை அமைத்தால் இன்னும் சில நாட்களில் வீடுகளுக்கு பைப்லைன் கொடுக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது ரோட்டை தோண்டும் நிலை ஏற்படும். எனவே, அதிகாரிகள் முதலில் வீடுகளுக்கு பைப் லைன் கொடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் அதன்பிறகு ரோடு போடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: