×

ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் முறையான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆரணி, மார்ச் 15: ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் முறையான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு தாலுகா மேல்சீசமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமேடு, சோழம்பட்டு, தீபா நகர், மேட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்சீசமங்கலம் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் ஆரணி-வாழைப்பந்தல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், இதை ஏற்காத பொதுமக்கள் உடனடியாக எங்கள் பகுதிகளுக்கு குடிநீர் வாங்க ேவண்டும் என்று போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செய்யாறு பிடிஓ பாரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்குள் (இன்று) குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Arani ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...