×

வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தமிழ் முதல்தாள் தொடங்கியது 18ம் தமிழ் 2ம் தாள் நடக்கிறது

வேலூர், மார்ச் 15: வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தமிழ்பாடம் முதல்தாள் 2 மதிப்பெண் கேள்வி கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கி வரும் 29ம்தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ் முதல்தாள் தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கான வினாத்தாள்கள் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் உள்ள கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் தேர்வு தொடங்கியதையொட்டி கட்டுக்காப்பு மையங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் வாகனங்கள் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 227 மையங்களில் 51,354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக மாணவர்கள் அரை மணி நேரம் முன்னதாக தேர்வு மையங்களுக்கு வந்தனர். தகவல் பலகையில் எழுதப்பட்டிருந்த தேர்வு பதிவெண்களை பார்த்து மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு காலை 1.30 மணியளவில் சென்றனர். தேர்வு மையங்களில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வேலூர் அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் நலமேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். மதியம் 2 மணிக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. போட்டோவுடன் கூடிய வருகை பதிவேட்டில் உள்ள விவரங்கள், மாணவர்களுடைய ஹால் டிக்கெட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டதும், படித்து பார்க்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. காலை 2.15 மணிக்கு மாணவர்கள் தமிழ் பாடத்திற்கான தேர்வு எழுதினர். முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 250 ேபர் கொண்ட பறக்கும்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். தேர்வு பணியில் 251 தலைமை ஆசிரியர்களும், 3400 ஆசிரியரகள் ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் 2வது தாள் வரும் 18ம் தேதி நடக்கிறது. தேர்வு குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘தமிழ் பாடத்தேர்வு முதல் தாளில் 2 மதிப்பெண் கேள்வி கேட்டும் சற்று கடினமாக இருந்தது. மற்ற கேள்வி எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். இதில் மொத்தம் 231 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர். இவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Tags : Tamil ,Vellore District ,
× RELATED கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு...