வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

சத்தியமங்கலம், மார்ச் 14: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், வனப்பகுதியில் உள்ள ஓடைகள், பள்ளங்கள், தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியது.இதன்காரணமாக, வனவிலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனப்பகுதியில் உள்ள தற்காலிக தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை லாரியில் கொண்டு சென்று நிரப்புமாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நாகநாதன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகங்களிலும் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று தொட்டிகளில் நிரப்பப்படுவதால் வனப்பகுதியில் உள்ள யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தொட்டியில் உள்ள தண்ணீரை அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. கோடை காலம் முடியும் வரை தொட்டிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் நிரப்பப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: