பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு

கோபி, மார்ச் 14: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதை தொடர்ந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்திற்கு முறை நீர் பாசனம் அமல்படுத்தப்பட்டது.  ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணையானது 120 அடி உயரமும், 32 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததை தொடர்ந்து அணை நிரம்பியது.   அதைத்தொடர்ந்து அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டாம் போக சாகுபடிக்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 850 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அணைக்கு நீர் வரத்து 228 கன அடியாக மட்டுமே உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 75 அடியாகவும், அதன் கொள்ளளவு 14.26 டி.எம்.சியாகவும் குறைந்ததை தொடர்ந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முறை பாசனம் மூலம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  அதன்படி 16ம் முதல் 18ம் தேதி வரை மூன்று நாட்கள் கொடிவேரி அணையில் தலைப்பு மதகு அடைக்கப்பட்டு மீண்டும் 19ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் காரணமாகவும், அணைக்கு நீர் வரத்து குறைந்ததாலும் கோடை காலத்தில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் சிக்கனத்தை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் முதல்கட்டமாக மூன்று நாட்களுக்கு மட்டும் தண்ணீர் நிறுத்தப்படும். அதன் பின்னர் கடைமடை வரை தண்ணீர் சென்றடைகிறதா என்பதை கண்காணித்த பின்னரே அடுத்த முறை பாசனம் குறித்து அட்டவணை போடப்பட்டு அதனடிப்படையில் தண்ணீர் வழங்கப்படும். அதே நேரத்தில் விவசாயிகளும் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கோடை காலத்தை  சமாளிக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்,

Related Stories: