ஆனைக்கட்டி பழங்குடியின மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 16 கி.மீ., பயணம்

பெ.நா.பாளையம், மார்ச் 14: கோவை ஆனைகட்டி பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் நாளை நடக்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 16 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல மாவட்ட கல்வித்துறை சார்பில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  கோவை ஆனைகட்டியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மலை கிரமங்களான தூமனூர், சேம்புக்கரை, மாங்கரை, பணப்பள்ளி, கொண்டனூர், கண்டிவழி, ஜம்புகண்டிகல்காடு, தூவைப்பதி மற்றும் கேரளா மாநிலம் அட்டப்பாடி பழங்குடியின மலை கிரமாங்களான சோலையூர், சிறுவாணி எஸ்டேட் உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.  மலைகிராமத்தில் இருந்து பள்ளிக்கு மாணவர்கள் நடந்தும், வாடகை ஜீப் மூலமாக செல்கின்றனர். இப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. உயர்நிலை பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையமாகவும் இப்பள்ளி செயல்படுவதில்லை. இதனால், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத மாணவர்கள் 16 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

 நாளை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை இப்பள்ளியை சேர்ந்த 31 மாணவர்கள், 28 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள், தேர்வு எழுத ஆனைகட்டியில் இருந்து 16 கி.மீ பயணம் செய்து சின்னதடாகம் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று தேர்வு எழுதவுள்ளனர். இவர்கள் வசிக்கும் மலை கிராமங்களில் இருத்து ஆனைகட்டி வருவதற்கே பஸ் வசதி இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலையில், மேலும் 16 கி.மீ பயணம் செய்வது மாணவ, மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  பழங்குடி மாணவர்களின் நலன் கருதி ஆனைகட்டி பள்ளியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என மணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், தற்போது தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், “ஆனைகட்டி மாணவர்கள் சின்னதடாகம் பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசியுள்ளேன். மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வசதி செய்யப்படும்” என்றார்.

Related Stories: