×

கடனை திருப்பி கேட்டபோது தாக்குதல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோவை, மார்ச்.14:
கோவை ஆலாந்துறை அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கவுதம்(21). கூலித்தொழிலாளி. ரவியிடம் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ரூ.50 கடன் வாங்கியுள்ளார். இதனை வாங்கி வருமாறு மகன் கவுதமிடம் ரவி கூறியுள்ளார். அதன்படி மோகன் வீட்டுக்கு சென்ற கவுதம் 50 ரூபாயை திருப்பி தருமாறு மோகனிடம் கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த மோகனின் உறவினர் குருசாமி(55), எனக்கு மோகன் ரூ.2 ஆயிரம் தரவேண்டும் அதனையே நான் கேட்கவில்லை. நீ 50 ரூபாய்க்காக வந்து விட்டாய் என்று நக்கலாக கூறியுள்ளார். இதனால் கவுதமுக்கும், குருசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குருசாமியை கவுதம் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குருசாமி சத்தம்போடவே அவருடைய உறவினர்கள் 14 பேர் வந்து கவுதமை தாக்கியுள்ளனர்.

இதனால் அவமானம் தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு சென்ற கவுதம் நேற்று முன்தினம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வந்த ஆலாந்துறை போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குருசாமி அவருடைய மனைவி லட்சுமி, குருசாமி தம்பி சந்திரன், உறவினர்கள் மலர், செந்தாமரை, கலைவாணி, வேலுமணி, அம்சவேணி, முருகேசன், கணேசன், கிருபாகரன், பிரசாந்த், வீராசாமி ஆகிய 14 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : suicide ,attacker ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை