பிளஸ்1 கணித தேர்வு மிகவும் கடினம்

கோவை, மார்ச் 14: புதிய பாடத்திட்டத்தில் எழுதிய பிளஸ்1 கணித தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிளஸ்1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில், நேற்று கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயோலஜி, நியூட்ரிசியன், டெக்ஸ்டைல் மற்றும் ஆடைவடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வுகளை கோவை மாவட்டத்தை சேர்ந்த  34 ஆயிரத்து 382 பேர் எழுத இருந்தனர். இதில், தேர்வினை 32,826 பேர் எழுதினர். 1,556 பேர் தேர்வு எழுதவில்லை. இதில், வணிகவயில் தேர்வினை அதிகபட்சமாக 926 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று நடந்த கணித தேர்வு மிகவும் கடினமாக இருந்தாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

 இதுகுறித்து கோவை பிரசன்டேஷன் பள்ளி மாணவி ரோகினி கூறுகையில், “கணிதம் புதிய பாடத்திட்டம் படிக்கவே சிரமமாக இருந்தது. இந்நிலையில், பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள், 3 மதிப்பெண் வினாக்கள், 5 மதிப்பெண் வினாக்கள் என அனைத்தும் கடினமாக இருந்தது. தேர்ச்சி பெறும் அளவிற்கு தான் தேர்வு இருந்தது. 90க்கு 60 மதிப்பெண் எடுப்பதே சிரமம்” என்றார். இதே கருத்தை பெரும்பாலான மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். மேலும், உயிரியல் மற்றும் வணிகவியல் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக கூறினர்.  

Related Stories: