பங்குனி உத்திர தேர் திருவிழா பேரூர் பட்டீசுவரர் கோயிலில் கொடியேற்றம்

தொண்டாமுத்தூர், மார்ச் 14: கோவை அருகேயுள்ள பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கோவை  அருகேயுள்ள பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று துவங்கியது. அதை முன்னிட்டு காலை 6 மணியளவில் கோயில் நடை  திறக்கப்பட்டது. பின்னர் பட்டி விநாயகர் கோயிலில் இருந்து புற்று மண்  எடுத்து வந்தனர். அதையடுத்து மூலவர் பட்டீசுவரருக்கு 24 வகை அபிஷேக, ஆராதனை  நடந்தது. பின்னர் 7 மணியளவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சோமாஸ்கந்தர்,  பச்சை நாயகி, வள்ளி, தெய்வானை சுப்பிரமணியசுவாமி, சண்டிகேஸ்வரர்  ஆகியோருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

Advertising
Advertising

அதை தொடர்ந்து கோயில் யானை  கல்யாணிக்கு பட்டம் சூட்டப்பட்டு கஜபூஜையும், பசு மாட்டிற்கு கோ பூஜையும்  நடந்தது. பின்னர் வேதம், ஆகமம், திருமறை முழங்க காலை 8.50 மணியளவில் மஞ்சள்  துணியில் ரிஷப கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் ‘பேரூரா...’,  ‘பட்டீசா...’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.  பின்னர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. அதில் சந்திரசேகர்,  சவுந்தரவள்ளி சுவாமிகள் மலர் பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். பின்னர்  சாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்களும் காப்பு கட்டினர். கொடியேற்ற  விழாவில் இந்து சமய அறநிலைய துறை உதவி கமிஷனர் சரவணன், சிவ பக்தர்கள் நல  சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன் உள்பட ஒதுவார்கள், சிவாச்சாரியர்கள்  பங்கேற்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 18ம்  தேதி நடக்கிறது.  வரும் 17ம் தேதி வரை தினமும் காலை, மாலையில் பஞ்ச  மூர்த்திகள் திருவீதி உலாவும், மாலையில் யாகசாலை பூஜையும் நடக்கிறது.  முன்னதாக வரும் 17ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

Related Stories: