நாடாளுமன்ற தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர் நிறுத்த முடிவு

ஈரோடு, மார்ச் 14:  தமிழகத்தில்  கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி கள் இயக்கம் சார்பில்  வேட்பாளர் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். இதுகுறித்து ஈரோட்டில் நல்லசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: உலகில்  108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்கவும்,  பருகவும் தடை கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் 30 ஆண்டுக்கு மேலாக  கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு  எதிரானது. விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வஞ்சித்து  வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளகமிஷன் பரிந்துரை  அமல்படுத்துவது போல விவசாயிகளுக்கு விவசாய கமிஷன் பரிந்துரை அமல்படுத்த  வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய, மாநில அரசுகள்  எங்களது கோரிக்கையை புறம்தள்ளி வருகிறது. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட  தொழில்களுக்கு நம் நாட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதால் விவசாயம்  கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடிந்து  வருகிறது. கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். விவசாய கமிஷன் அமைக்க  வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு கள்  இயக்கம் சார்பில் ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: