பெரியமாரியம்மன் கோயில் திருவிழா கடைகளுக்கு இன்று ஏலம்

ஈரோடு, மார்ச் 14:  ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட தற்காலிக கடைகளின் ஏலம் இன்று(14ம் தேதி) போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவின்போது தற்காலிக கடைகளுக்கு ஏலம் நடத்தப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு விடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்க உள்ளது. இதையொட்டி, கோயில் பகுதியில்  40 தற்காலிக கடைகள் கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்படவுள்ளது. இதில், கடை எண் 2 முதல் 40 வரை  உள்ள கடைகளுக்கு உரிமம் பெறவும், விளம்பர தட்டி, பேனர், ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் உரிமத்திற்கு 2 லட்சம் ரூபாய் டெபாசிட்டும், முடிகாணிக்கை, முடி சேகரம் செய்து கொள்ள 25 ஆயிரம் ரூபாயும், மண் உருவ பொம்மை சேகரம் செய்து  கொள்ள 25 ஆயிரம் ரூபாயும், வாய்க்கால் மாரியம்மன் கோயிலை சுற்றி தற்காலிக கடைகளில் கட்டணம் வசூல் செய்யும் உரிமத்திற்கு 10  ஆயிரம் ரூபாயும் டெபாசிட் செலுத்த வேண்டும்.இவற்றை வங்கியில் செலுத்தி வரைவோலை (டிடி) பெற்றவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நடந்த ஏலத்தின்போது, ஏலத் தொகை அதிகமாக இருந்ததால் ஒப்பந்ததாரர்கள் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால், ஏலம் 14ம் தேதி (இன்று) நடைபெறும் என ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி, ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி கோயிலில் இன்று (14ம் தேதி) 2.30 மணிக்கு ஏலம் நடக்கிறது.

Related Stories: