‘அலைபாயுதே’ பட பாணியில் பதிவு திருமணம் மனைவியை சேர்த்து வைக்ககோரி கணவர் போலீசில் புகார்

ஈரோடு, மார்ச் 14:  ‘அலைபாயுதே’ பட பாணியில் பதிவு திருமணம் செய்து காதல் ஜோடியின் கணவர் மனைவியை சேர்த்து வைக்க கோரி ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் சைலேஷ்குமார் (28). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அதேமில்லில் ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சவுந்தர்யா(22) என்பவர் வேலை பார்த்துள்ளார். இதனால் சைலேஷ்குமாருக்கும், சவுந்தர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைத்த காதல் ஜோடி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், இருவரும் அவரவர் வீடுகளில் ‘அலைபாயுதே’ பட பாணியில் வாழ்ந்து வந்தனர்.இதைத்தொடர்ந்து, சைலேஷ்குமார், சவுந்தர்யாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு பலமுறை சென்றார். ஆனால், அவரது பெற்றோர் மறுத்தனர். கடந்த ஒரு வாரமாக சவுந்தர்யாவின் பெற்றோர் அவரது செல்போனை பறித்து வைத்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சைலேஷ்குமார், ஈரோடு மகளிர் போலீசில் மனைவியை சேர்த்து வைக்க கோரி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் சவுந்தர்யா மற்றும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, ஸ்டேஷன் வரவழைத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு தான் சவுந்தர்யாவின் பெற்றோருக்கு அவர் பதிவு திருமணம் செய்தது தெரியவந்தது. சவுந்தர்யாவிடம் விசாரணை நடத்தியதில், அவர் அவரது காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால், சைலேஷ்குமாருடன் அவரது மனைவியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories: