நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பால் கடம்பூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல்

கெங்கவல்லி, மார்ச் 14: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு போலீசார் மற்றும்  வருவாய்த்துறையினர் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதால், கடம்பூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம்  முழுவதும் கிராமங்கள்தோறும் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் மற்றும் மஞ்சு  விரட்டு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம்  கெங்கவல்லி தாலுகாவில் கடம்பூர் ஊராட்சியில் நடப்பு மாதத்தில் 15ம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு விழாவை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து  கடம்பூர் -கெங்கவல்லி சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்து,  நாளை(15ம் தேதி) ஜல்லிக்கட்டு நடத்துவதாக  ஜல்லிக்கட்டு குழுவினர் அறிவித்தனர். இதற்காக ஜல்லிக்கட்டு விழா மேடை, பார்வைையாளர்கள் கேலரி,  மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன், மாடுக்களுக்கு டோக்கன் வழங்கள்,  அதிகாரிகள் ஆய்வு மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அனுமதியும்  பெற்றனர். இதையடுத்து, நேற்று காலை கடம்பூர் ஜல்லிக்கட்டு குழு தலைவர்  லோகு மற்றும் உறுப்பினர்கள், ஆத்தூர் டிஎஸ்பி ராஜீ, ஆர்டிஓ அபுல் காசிம்  ஆகியோரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அப்போது  நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் போலீசார், தேர்தல் பணிகளுக்கு  சென்றுவிட்டனர். தவிர, வருவாய்த்துறை அலுவலர்களும் தேர்தல் பணிகளில்  மும்முரமாக உள்ளனர். இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பு  பணிக்காக போலீசார் யாரையும் அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது என  தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விழா குழுவினர், ஜல்லிக்கட்டு போட்டி  நடத்த பல லட்சம் செலவு செய்து தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில்  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்தால் நஷ்டம் ஏற்படும் என்றும், காளைகளின்  உரிமையாளர், மாடுபிடி வீரர்களுக்கு பதில் கூற முடியாது என  தெரிவித்துள்ளனர். ஆனால், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இதை ஏற்க  மறுத்துவிட்டனர். இதனால் அறிவித்தபடி நாளை கடம்பூரில் ஜல்லிக்கட்டு நடப்பது  கேள்விக்குறியாகி உள்ளது.

Related Stories: