தேர்தல் வாக்குப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகளை கட்சியினர் வாகனங்களில் அழைத்து வரக்கூடாது

சேலம், மார்ச் 14: நாடாளுமன்றத் ேதர்தல் வாக்குப்பதிவின்போது, மாற்றுத்திறன் வாக்காளர்களை அரசியல் கட்சிகள் வாகன ஏற்பாடுகளை செய்யக்கூடாது என கலெக்டர் ரோகிணி எச்சரித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி கலந்து கொண்டார். அப்போது வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மாற்றுத் திறனாளிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோலங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து மாற்றுத்திறனாளிகள் அசத்தினர். இதனை தொடர்ந்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை, அனைத்துக்கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கலெக்டர் ரோகிணி திறந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலெக்டர் ரோகிணி கூறுகையில், `தேர்தலின்போது வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் வாகனங்கள் ஏற்பாடு செய்யக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை அழைத்து வருவதற்கான வாகன வசதி மற்றும் வரிசையில் நிற்காமல் சுலபமான முறையில் வாக்களிக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாற்றுத்திறனாளிகளும், தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முன்வர வேண்டும். சேலம் மாவட்டத்தில் இதுவரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ₹11 லட்சத்திற்கு மேல் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணமும், 15 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: