ஆத்தூர் அருகே உணவு, தண்ணீர் தேடி கிராமங்களுக்கு மயில்கள் படையெடுப்பு

ஆத்தூர், மார்ச் 14:  கல்வராயன் மலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் மயில்கள் வருவது அதிகரித்துள்ளது. ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், கல்பகனூர் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி கல்வராயன் மலைத்தொடர் அமைந்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருகின்றன. இவை கிராமத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை தேடி வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகளை, தெருநாய்கள் துரத்திச்சென்று கடிப்பதும், விபத்துக்களில் சிக்கியும் உயிரிழக்கின்றன.  தற்போது அதிக அளவில் மயில்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் கிராமத்தில் உள்ள பாக்கு, தென்னை தோப்புகளில் தஞ்சமடைகின்றன. இவை அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதப்படுத்துகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மயில், மான் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க, வனப்பகுதியில் தொட்டிகள் கட்டி தண்ணீர் நிரப்ப வேண்டும். தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: