×

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி, தேர்தலுக்கு தனித்தனியாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு

* வடக்கு மண்டல ஐஜி பேட்டி * மின்னணு இயந்திரங்களை கொண்டுவர மாற்றுப்பாதை

திருவண்ணாமலை, மார்ச் 14: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கும், தேர்தல் வாக்குப்பதிவுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேர்தல் நடத்துவதில் பாதிப்பு ஏற்படுமா என வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகராஜன் மற்றும் கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலையில் நேற்று ஆய்வு நடந்தது. அதில், வேலூர் சரக டிஐஜி வனிதா, எஸ்பி சிபிசக்ரவர்த்தி, டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி கலெக்டர்(பயிற்சி) பிரதாப் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் வழி, பாதுகாப்பு அறைகள், கிரிவலப்பாதையை கடந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்கள் வருவதற்கான மாற்றுப்பாதை வசதி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் அளித்த பேட்டி: சித்ரா பவுர்ணமிக்கும், தேர்தலுக்கும் தனித்தனியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலான எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சித்ரா பவுர்ணமியால், தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்காது. ஏப்ரல் 18ம் தேதி இரவு 7 மணிக்கு பிறகுதான் கிரிவல நேரம் தொடங்குகிறது. எனவே, வாக்குகளை பதிவு செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கிரிவலப்பாதைக்கு அருகில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாற்றுப்பாதைகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவந்து சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையை எந்தெந்த இடங்களில் கடந்து வர வேண்டியிருக்கும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல், சித்ரா பவுர்ணமி கூட்ட நெரிசலை கண்காணிக்க, தற்காலிக பஸ் நிலையங்கள், கிரிவலப்பாைத உள்ளிட்ட இடங்களில் கூடுதலான சிசிடிவி கேமராக்கள் அமைத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார்.

பின்னர், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்ததாவது:
சித்ரா பவுர்ணமியால் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் வாய்ப்பு இல்லை. திருவண்ணாமலை நகரில் உள்ள 138 வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் கிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலையை இணைக்கும் பிரதான 9 சாலைகளில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள சுமார் 200 வாக்குச்சாவடிகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுவந்து சேர்க்கப்படும். சித்ரா பவுர்ணமியும், தேர்தல் வாக்குப்பதிவும் எந்த பாதிப்பும் இல்லாமல் நடத்திட அனைத்து நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தொகுதிகளில் இருந்தும், ஆரணி தொகுதிக்கு உட்பட்ட மயிலம், செஞ்சி தொகுதிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்க்கும் மாற்றுப்பாதைகள் தேர்வு செய்துள்ளோம். மதுரை நிகழ்வும், திருவண்ணாமலை நிகழ்வும் வேறு வேறானது. எனவே, வாக்குப்பதிவு சித்ரா பவுர்ணமியால் பாதிக்காது. ஓட்டுப்போட்டுவிட்டு தாமதமாக திருவண்ணாமலை கிரிவலம் வர வேண்டும் என பக்தர்களுக்கு கோரிக்கை வைக்க இருக்கிறோம். வெளியூர் பக்தர்கள் வாக்களித்துவிட்டு கிரிவலத்துக்கு வரும் வகையில், தங்கள் பயண நேரத்தை சரியாக திட்டமிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் ஆணையம் மாற்று வழிகளை பார்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. அதையொட்டி, இந்த கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chitra Poornima ,Tiruvannamalai ,election ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...