தகுதியான அனைவருக்கும் ஊக்கத்தொகை கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, பிப். 22:   தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிருந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பயனாளிகள் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானோருக்கு இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில்பட்டி அடுத்த மந்தித்தோப்பு கிராமத்திலும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் தங்களது கிராமத்தில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். அத்துடன் அதிகாரிகள் மீது ஆவேசம் கொண்ட கிராம மக்கள் தகுதியான அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கக்கோரி கோவில்பட்டி ஒன்றிய  அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து பிடிஓ முருகானந்திடம் புகார் தெரிவித்து சென்றனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: