கயத்தாறு அருகே வில்லிசேரியில் காட்டுத்தீ 1200 ஏக்கர் மக்காச்சோள கதிர்கள் எரிந்து நாசம்

கயத்தாறு, பிப். 22: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வில்லிசேரியில் 1200 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சோளக்கதிர்கள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அடுத்தடுத்த விளைநிலங்களுக்கும் பரவியது. இதையறிந்த விவசாயிகள் தீயை அணைக்க கடுமையாக போராடினர். தீ வேகமாக எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதை சரியில்லாததால் வீரர்களும் வாகனத்தை உள்ளே கொண்டு செல்ல இயலாமல் பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு இயற்கையான முறையில் தீயை செடி, கொடிகளை கொண்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு தீ எரிந்து கொண்டிருப்பதால் வீரர்களும் தீயை அணைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

Advertising
Advertising

வாகனங்கள் செல்ல சரியான பாதை இல்லாததால் நெடுந்தூரம் நடந்தே செல்லவேண்டியிருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலரது நிலங்களில் மக்காச்சோள கதிர்களை அறுவடை செய்து களங்களில் சேகரித்து வைத்திருந்தனர். அதுவும் தீயின் கோரப்பிடியில் தப்பவில்லை. வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செல்வராஜ் வந்து மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறார். கோவில்பட்டி தாசில்தார் பரமசிவம் தீப்பற்றி எரியும் நிலங்களையும் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து தீப்பிடித்து எரிவதை அணைக்க முடியாததால் விவசாயிகளின் கண் முன்னே பலநாட்கள் பாதுகாத்து வளர்த்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்காச்சோள கதிர்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டு செல்வதை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

Related Stories: