நெல்லையில் கார் திருடி சென்னையில் விற்க முயன்ற 2 பேர் கைது

நெல்லை, பிப். 22: நெல்லையில் கார் திருடி சென்னையில் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதின் (63). நெல்லையில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் தனது காரை அலுவலகம் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்த போது அதனை காணவில்லை. மர்மநபர்கள், கள்ளச்சாவி மூலம் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுல்தான் அலாவுதீன், டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் காரை திருடிச் சென்ற நபர்கள், அதனை சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் விற்க முயன்றுள்ளனர். அந்த ஒர்க்ஷாப் உரிமையாளர், சுல்தான் அலாவுதினுக்கு தெரிந்தவர் என்பதால் இதுகுறித்து அவர், தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஒர்க்ஷாப் உரிமையாளர் சென்னை திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் திருவொற்றியூரைச் சேர்ந்த குமார் (40), நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த அருண்குமார் (23) ஆகியோர் நெல்லையில் இருந்து காரை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து நெல்லை குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று காரை மீட்டதோடு, குமார், அருண்குமார் ஆகியோரை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: