முதல்வரின் சிறப்பு நிதி பெற விண்ணப்பிக்க யூனியன் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

ஈரோடு, பிப். 22: முதல்வரின் சிறப்பு நிதி பெற ஈரோடு ஊராட்சி ஒன்றிய(யூனியன்) அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர்.தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 2ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.இதனையடுத்து, சிறப்பு நிதி பெற மக்களிடம் விண்ணப்பங்கள் பெற அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பெற இன்றே(22ம் தேதி) கடைசி தேதி என தகவல் வெளியானதால், நேற்று ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளித்தனர். இதுகுறித்து ஈரோடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், முதல்வரின் சிறப்பு நிதி பெற மாவட்டத்தில் உள்ள அந்தந்த யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் குழு மூலம் கிராமங்களில் உள்ள மக்களிடம் இத்திட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் என சான்று வைத்திருப்போர், பட்டியலில் இடம் பிடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியலில் இடம் பெறாதவர்களிடம் அரசு விண்ணப்பங்களை பெற வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாங்கள் மூன்று நாள் சிறப்பு முகாம் நாளை(22ம் தேதி) முடிவடைகிறது. ஆனால் அரசுவிண்ணப்பங்கள் பெறுவதற்கு எவ்வித காலக்கெடும் விதிக்கவில்லை. இதனால் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பிக்க வரும் மக்கள் அவர்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றின் நகல்களை எடுத்து வர வேண்டும். எங்களிடம் உள்ள விண்ணப்ப படிவத்தில், அவர்களது பெயர், விலாசம், ஆதார் எண், இணைப்பு ஆவணங்கள் விவரங்களை எழுதுகிறோம். பின், அவற்றை சிறப்பு நிதியுதவிக்கான போர்ட்டலில், பதிவேற்றம் செய்கிறோம். விண்ணப்பித்தவர்கள் தகுதியானவர்களா என்பதை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள். தகுதியான பயனாளிகள் முதற்கட்ட நிதி பெறும் பட்டியலில் இடம் பெறுவர். மற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, அவர்களுக்கும் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: