ரூ.2 ஆயிரம் பெறுவோர் பட்டியலில் சேர்க்க கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருப்பூர், பிப்.22: தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க கோரி, பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலின்படி, பயனாளிகள் பெயர், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், பட்டியலில் இடம் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்,  ஆதார் எண்,  வங்கி சேமிப்பு கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதற்கிடையே,  பயனாளிகள் பட்டியலில் தகுதியானவர்களின் பலரும் விடுபட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  இந்நிலையில் நெருப்பெரிச்சல், ஜே.ஜே.நகர், வெள்ளியங்காடு,

திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தாங்கள் அனைவரும் பனியன் தொழிலாளர்கள் என்றும், குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளபோதும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். பின்னர் கோரிக்கை மனுவை வழங்கினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எடுத்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது அரசு அறிவித்துள்ள நிதியை பெறும் பயனாளிகள் பட்டியலில் உண்மையான ஏழை மக்கள் பெயர்கள் இல்லை. இதிலும் வசதி படைத்தவர்களே அதிகம் பயனடைய வாய்ப்பு உள்ளது. அதனால் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கும் வரையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், என்றனர்.

Related Stories: