இந்திய பருத்தி கழகம் மூலம் நேரடி பஞ்சு கொள்முதல்

திருப்பூர், பிப்.22: பருத்தி விவசாயிகளுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்துவதோடு,  இந்திய பருத்தி கழகம் மூலம் நேரடியாக பஞ்சு கொள்முதல் செய்து பஞ்சாலைகளுக்கு குறைந்த விலைக்கு வழங்கவேண்டுமென பஞ்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, மகாராஸ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் உள்ள பஞ்சாலைகளுக்கு 3 லட்சம் டன் பருத்தி தேவைப்படுகிறது. 50 ஆயிரம் டன் பருத்தி இருப்பு உள்ள நிலையில் தட்டுப்பாடு ஏற்படுவது பஞ்சாலை உரிமையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி கழகம் பெயரளவில் உள்ளதால் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் பருத்தி விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து நாட்டில் பஞ்சு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பஞ்சாலை உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு பல முறை புகார் கூறியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. கார்ப்பரேட் பஞ்சாலை நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்கின்றனர். இதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்கின்றனர்.

சிறு, குறு பஞ்சாலைகள் பெரிய அளவில் பஞ்சு கொள்முதல் செய்ய போதிய நிதி இல்லாததால் ஆயிரக்கணக்கான பஞ்சாலைகளை இழுத்து மூடினர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு இழந்தனர்.  நம்நாட்டின் பின்னலாடை துறைக்கு போட்டியாக  உள்ள வியாட்நாம், சீனா, இலங்கை, வங்கதேசம், மியான்மர் உட்பட பல்வேறு ஆசிய  நாடுகள் உள்ளன. சீனா தனது நாட்டின் தேவைக்கு பஞ்சை இருப்பு வைத்துக்கொண்டு  மீதமுள்ள பஞ்சை மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. இதனால், சீனாவில் உற்பத்தி  செய்யப்படும் பின்னலாடைகள் இந்தியாவை விட குறைவான விலைக்கு உலக அரங்கில்  விற்பனைசெய்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் பருத்தி விவசாயிகளுக்கு விதை, பூச்சிக்கொல்லி மருந்து, டீசல் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கவேண்டும். பருத்தி கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையை கொடுத்து நேரடியாக கொள்முதல் செய்து பஞ்சாலைகளுக்கு குறைவான விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பஞ்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: