×

யுகேஜி மாணவனின் சமூக பொறுப்புணர்வு

தா.பேட்டை, பிப்.22: துறையூரில் தனியார் பள்ளி முன்பாக குடிநீர் குழாய் உடைந்து சில மாதங்களாக தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி ஆணையரிடம் யுகேஜி மாணவன் மனு அளித்தார். துறையூர் சௌடாம்பிகா பள்ளி முன்பாக நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சில மாதங்களாக தண்ணீர் வீணாக சென்றது. குடிநீர் குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இந்நிலையில் குடிநீர் வீணாவதை கண்ட சவுடாம்பிகா பள்ளியில் யுகேஜி மாணவன் சியாம்கிருஷ்ணா வீட்டில் தனது தாயிடம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வீணடிக்க கூடாது. மரம் வளர்த்து மழை வளத்தை பெருக்க வேண்டும் என ஆசிரியை கூறுகின்றார். ஆனால் எங்கள் பள்ளியின் முன்பு குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என வேதனையோடு கூறியுள்ளார். அதனை சரிசெய்ய நகராட்சியில் புகார் செய்ய வேண்டுமென தாய் கூறியதையடுத்து சியாம்கிருஷ்ணா குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டுமென எழுதப்பட்ட கோரிக்கை மனுவை துறையூர் நகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் கொடுத்தார். மனுவை பெற்ற ஆணையர் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். யுகேஜி படிக்கும் நான்கு வயது மாணவனின் சமூக பொறுப்பிற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : CSG ,student ,CSR ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...