படிக்கட்டு பயணத்தால் விபத்து அபாயம் மாநகரில் விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள்

திருச்சி, பிப்.22:  திருச்சி மாநகரில் ஷேர் ஆட்டோக்களில் படிக்கட்டு பயணத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களுக்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரை பொறுத்த வரை எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், கருமண்டபம், உறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஷேர் ஆட்டோக்கள் அனைத்தும் மத்திய பஸ்நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. இந்த ஆட்டோக்களுக்கு கிலோ மீட்டர், கட்டண வரையறை மற்றும் பயணிகள் வரையறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வரையறை தற்போது ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இருக்கைகளில் போதுமான அளவு ஆட்கள் ஏறினாலும் ஆட்டோக்களை எடுப்பதில்லை. அதிமான பயணிகளை ஏற்றிக்கொண்டு படிகட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் சொல்லவே வேண்டாம்.  ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் நிரம்பி வழியும். புத்தக மூட்டையுடன் பள்ளி மாணவர்களும், லக்கேஜ்களுடன் பயணிகள் படிகட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். அதுவும் போதாது என்று இடையில் ஒருவர் கைறை மறித்தாலும் அதே இடத்தில் பிரேக் போட்டு நிறுத்தி அந்த பயணியையும் ஏற்றிக்கொண்டு பறந்து செல்கிறது. நடு ரோட்டில் திடீரென ஷேர் ஆட்டோவை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் நிலை ஏற்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும். பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு காலை நேரத்தில் அதிகாரிகள் செல்ல வேண்டும் என்றால் கருமண்டபம்  பிரதான சாலையில் செல்ல வேண்டும். அப்படி தினமும் இந்த வழியாக செல்லும் அதிகாரிகள், அவர்கள் கண் முன்னே ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றுவதை இதுவரை கண்டித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிகாரிகளுக்கு தெரிந்துதான் இந்த விதிமுறைமீறல் நடக்கிறதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய ஆய்வு செய்து ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களை தடுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: