தென்னூர் பஸ் ஸ்டாப் அருகே பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கிய கழிவுநீர் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

திருச்சி, பிப்.22:  திருச்சி தென்னூர் சாலையில் பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் ஓடும் கழிவுநீரால் கடந்த 10 நாட்களாக பொதுமக்களும், வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக கழிவுநீர் சாலையில் ஓடுவதை காணலாம். மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் பெரும்பாலான மேன்கோல்கள் திறந்து கிடக்கும். அல்லது மேன்கோல் வழியாக கழிவுநீர் வழிந்து ஓடுவது தொடர்கதையாக உள்ளது.

திருச்சி தென்னூர் சாலையில் பஸ் ஸ்டாப் அருகே கடந்த பத்து நாட்களுக்கு முன் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்கோல் வழியாக கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்தனர். இது குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வந்து மேன்கோலை திறந்துவிட்டு, எச்சரிக்கைக்காக குழியை சுற்றி மண்மேடிட்டு குச்சிகளை வைத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுவரை பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யவில்லை. வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது தெறிப்பதால் சிரமத்திற்குள்ளாகின்றனர்.  தேங்கிகிடக்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தென்னூர் சாலையில் பஸ் ஸ்டாப் அருகே சாலையில் ஓடும் கழிவுநீரை தடுத்து, அடைப்பை சீரமைத்து மேன்கோலை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: