×

சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கி.மீ. நீள பறக்கும் பாலப் பணி தீவிரம் நவீன தொழில் நுட்பத்தில் தூண்கள் அமைப்பு

மதுரை, பிப். 22:  மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரையிலான 7.4 கி.மீ. நீள பறக்கும் பாலம் கட்டும் பணி நவீன தொழில் நுட்பத்தில் தீவிரமடைந்துள்ளது. மொத்தம் 225 தூண்களில் 20 தூண்களுக்கான இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை- நத்தம் வரையிலான 35 கி.மீ. சாலையை ரூ.1,028 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்கிறது. இதில் சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கி.மீ. தூரம் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ.416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.  இதற்கான பணிகள் 5 மாதங்களுக்கு முன் தொடங்கியது. பறக்கும் பாலத்திற்காக 7.4 கி.மீ. தூரமும் மொத்தம் 225 தூண்கள் எழுப்பப்படுகின்றன. இதில் சொக்கிகுளம் சந்திப்பு பி.டி.ஆர். சிலை முதல் கலெக்டர் பங்களாவை அடுத்து டி.ஆர்.ஓ.காலனி சாலை வரை 20 தூண்களுக்கான அஸ்திவாரத்துடன் இரும்பு கம்பிகட்டுகள் கட்டப்பட்டு உயர்ந்துள்ளன. இதில் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொட்டி நிரப்பப்படுகின்றன.  இந்த பணிகள் அனைத்தும் நவீன தொழில் நுட்பத்துடன் இரவு பகலாக நடக்கின்றன.

இதன் இருபக்கமும் இருந்து மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, பறக்கும் பாலம் உயரத்திற்கு மேல் புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதே நேரத்தில் ஊமச்சிகுளத்தில் இருந்து நான்கு வழிச்சாலைக்கான விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருகின்றன. தூண்கள் கட்டுவதே பிரதான பணியாகும். இதனை இணைக்க ரெடிமேடு காங்கிரீட் தளங்கள் வேறு இடத்தில் தயாராகி வருகின்றன. இதனை லாரிகளில் ஏற்றி வந்து கிரேன் மூலம் விரைவாக பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதி கட்டமாக பிடிஆர் சிலையில் இருந்து நேராக தெற்கு நோக்கியும்,  அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி ஈகோ பார்க் அருகில் இருந்தும், மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலையில் மாநகராட்சி வாயில் அருகில் இருந்தும் பறக்கும் பாலத்திற்கு ஏறி, இறங்கும் வகையிலும் பாதை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறும்போது, “பறக்கும் பாலம் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. 2020ல் பணியை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுவே தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலமாக அமையும். ஊமச்சிகுளத்தை தாண்டி அமையும் நான்கு வழிசாலை நத்தம் நான்கு வழிச்சாலையில் இணைந்து கொட்டாம்பட்டி அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் இணையும்.
தற்போது மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சிக்கு மேலூர், கொட்டாம்பட்டி வழியாக நான்கு வழிச்சாலை உள்ளது. புதிய பறக்கும் பாலம், நத்தம் நான்கு வழிசாலை வழியாக செல்லும்போது மதுரை-திருச்சி இடையே பயண தூரம் 20 முதல் 23 கி.மீ. குறையும். வாகனங்கள் இருவேறு சாலைகளில் பிரிந்து செல்வதால் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது. இதுவே புதிய சாலை திட்டங்களின் நோக்கமாகும். பாலம் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வரும்போது தான் இதன் முக்கியத்துவத்தை உணர முடியும்” என்றார்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...