நாடாளுமன்ற தேர்தல் வருவதால் நாளை துவங்கி 2 நாட்களுக்கு வாக்காளர் சேர்ப்பு முகாம் விடுபட்டவர்கள் சேர சிறப்பு ஏற்பாடு

மதுரை, பிப். 22:  நாடாளுமன்ற தேர்தலுக்காக நாளையும், நாளை மறுநாளும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் முதல் மே வரை பல கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஆயத்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜன.31ம் தேதி வெளியிடப்பட்டது. மதுரை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 25 லட்சதது 66 ஆயிரத்து 319 பேர். இதில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 332 ஆண்களும், 12 லட்சத்து 97 ஆயிரத்து 864 பெண்கள், 123 இதரபாலினத்தார் உள்ளனர். மாவட்டத்தில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 532 பேர் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், வாக்காளராக தகுதியான அனைவரையும், பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக தற்போது 18 வயது முடிந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை பிப்.23 மற்றும் நாளை மறுநாள் பிப்.24ம் ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2,716 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. 18வயது முடிந்து இதுவரை வாக்காளராக சேராதவர்கள் இந்த முகாமில் படிவம் 6ஐ பெற்று வயது, முகவரிக்கான சான்றிதழை இணைத்து வாக்குச்சாவடி மையத்திலேயே விண்ணப்பிக்கலாம். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், விண்ணப்பத்தை பெற்று நேரில் விசாரணை நடத்தி, வாக்காளர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வார்கள். அந்த பெயரை, சம்பந்தப்பட்ட  சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் சேர்ப்பு அலுவலர் பட்டியலில் சேர்ப்பார்.  இந்த பட்டியல் துணைப்பட்டியலாக தேர்தல் நேரத்தில் வெளிவரும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களும் ஓட்டுப் போடலாம்.

Related Stories: