×

காரிப்பட்டி போலீசாரை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண்கள் திடீர் தர்ணா

சேலம், பிப்.22: காரிப்பட்டி போலீசாரை கண்டித்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட 29 பெண்கள் உட்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த 30க்கும்மேற்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனைவரும் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் திடீரென போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 48 பேரை கைது செய்தனர்.இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது பகுதியில் உள்ள 9 பெண்களின் கணவர்கள் ஒரு வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டுக்கு சென்றபோது,  காரிப்பட்டி போலீசார் அவர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு 9 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 9பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டோம்,’’ என்றனர்.இதையடுத்து கைது செய்யப்பட்ட 50 பேரை போலீசார் வேனில் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட 9பேர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தர்ணா போராட்டத்தால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

Tags : collector ,office ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...