சேலம் ஆவினை லாபத்தில் இயக்க 15 நாடுகளுடன் ஒப்பந்தம்

ஓமலூர், பிப்.22: சேலம் ஆவினை லாபத்தில் இயக்க 15 நாடுகளுடன் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஒன்றிய தலைவர் ஜெயராமன்  தெரிவித்தார். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சிறப்பு பேரவை கூட்டம், ஓமலூரில் நடந்தது. ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், ஒன்றிய துணை தலைவர் ஜெகதீசன் ஆகியோர், சங்கத்தின் செயல்பாடுகள், நஷ்டத்திற்கான காரணங்கள் குறித்து பேசினர். இதனை தொடர்ந்து உதவி பொதுமேலாளர் சத்யா வாசித்த ஆண்டறிக்கையில், ‘சேலம் ஆவின் பால் ஒன்றியம் தற்போது ₹25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தொகுப்பு, பால் குளிர்விப்பான் நிலையங்களில் இருந்து 2011 முதல் 2016 வரை, சென்னை ஆகிய இடங்களுக்கு அனுப்பிய பால் திடச்சத்து வேறுபாட்டினால் ஒன்றியத்திற்கு சுமார் ₹2.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சேலம் ஒன்றியம் சுமார் 28 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது,’ என தெரிவித்தார்.இதையடுத்து பேசிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் நடைமுறைகள் ஏற்றுகொள்ள முடியாது. லாபத்தில் இயங்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் போது, அதை அப்படியே வளர்த்துகொண்டு சென்றால் நிர்வாகம் எதற்கு? என்று பேசினர்.  ஒன்றிய தலைவர் ஜெயராமன் பேசுகையில், ‘சேலம் ஆவின் பால் இந்தியாவிலேயே சிறந்த தரமான பால் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் ஆவினில் அதன் கொள்ளளவை விட, சுமார் 2 லட்சம் லிட்டருக்கு மேல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் ஆவினில் சுமார் 5லட்சம் லிட்டர் பால் தான் கையாளும் திறன் உள்ளது. அனால், சுமார் 7லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது. மீதமுள்ள பாலை மாற்று ஒன்றியங்களுக்கு கொண்டு சென்று, பவுடர் ஆகும்போது லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. அதனாலேயே சேலம் ஒன்றியம் நாசமடைந்துள்ளது. அதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பால் ஏற்றுமதி செய்ய 15 நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது 3 நாடுகளுக்கு பால் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பட்டு வருகிறது. அதனால், வரும் காலங்களில் லாபகரமான ஒன்றியமாக, சேலம் ஒன்றியம் ஆகும்,’ என்றார்.

Related Stories: