பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு மாவட்டத்தில் 13 மையங்களில் வினாத்தாள் வைப்பு

சேலம், பிப்.22:சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள், போலீஸ் பாதுகாப்புடன் 13 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் 1ம் தேதி தொடங்கி, 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதேபோல், பிளஸ் 1 தேர்வு 6ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, பிளஸ் 2 பொதுத் தேர்வினை 18,734 மாணவர்கள், 21,334 மாணவிகள் என மொத்தம் 40,068 தேர்வர்கள் எழுதுகின்றனர். இதேபோல், பிளஸ் 1 தேர்வினை 17,034 மாணவர்கள், 20,323 மாணவிகள் என மொத்தம் 37,357 தேர்வர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கென மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 120 தேர்வு மையங்களில், தேர்வுகள் நடக்கிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள், சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளன. இவை சேலம் மாவட்ட  ஆயுதப்படை மைதானம் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள 13 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மைங்களுக்கும், இரட்டைப் பூட்டு முறையில் இரு காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வினாத்தாள் அடங்கிய மந்தன கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு நாளான்று தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அனைத்து மையங்களிலும், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக, முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: