வயோதிக குடும்பத்தின் வறுமைக்கு தீர்வு ‘இழுத்தடித்த’ மாற்றுத்திறனாளியின் உதவித்தொகை ஒப்படைப்பு அரசு வாகனத்திலே அழைத்து சென்று அசத்தல்

திண்டுக்கல், பிப். 22: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர்கள் இப்ராகிம்(70), ஜமீலம்மாள் (60). இவர்களது மகன் முஜிப்பூர்ரஹ்மான் (19) கடும் மாற்றுத்திறனாளி. தந்தை இப்ராகிம் கூலிவேலைக்கு சென்று குடும்பச் செலவினத்தை சமாளித்து வந்தார். வயதாகவே இவராலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மூவருக்கும் வரும் உதவித்தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜமீலம்மாளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவித்தொகை நிறுத்தப்பட்டது. முஜிப்பூர்ரஹ்மானின் வங்கிக்கணக்கில் ஆதார் இணைக்காததால் பல மாதமாக வந்த உதவித்தொகையையும் பெற இயலவில்லை. விரல்ரேகை அழுத்தமாக இல்லாததால் ஆதாரும் எடுக்க முடியவில்லை. இதனால் இக்குடும்பம் மிகவும் வறிய நிலைக்குத்தள்ளப்பட்டது. ‘வங்கி வரை’ வந்த உதவித்தொகையை பெற முடியாத நிலை அவர்களை மிகவும் வாட்டியது. இதற்காக வங்கி, ஆதார் மையம் என்று மாறிமாறி அலைந்து தோற்றுப்போய் ஒருகட்டத்தில் வீட்டிற்குள்ளே முடங்கி விட்டனர். இதுகுறித்த செய்தியை ‘தினகரன்’ கடந்த 19ம் தேதி விரிவாக வெளியிட்டது. இவர்களின் வறியநிலை குறித்தும் பாமரர்கள் சமுதாயத்தில் எப்படியெல்லாம் ஒதுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து நேற்றும் செய்தி வந்தது. வங்கி நிர்வாகத்தின் அலட்சியத்தை அறிந்த பொதுமக்கள் கடும் கோபமடைந்தனர்.

கலெக்டர் வினய் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு ஆத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் காந்த், கிராம நிர்வாக அதிகாரி ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நேரில் சென்றனர். அவர்களின் பிரச்னை குறித்து கேட்டு அறிந்ததுடன் இப்ராகிமை அரசு வாகனத்திலேயே வங்கிக்கு அழைத்து சென்றனர். இதுவரை வந்த உதவித்தொகையை சேர்த்து மொத்தமாக ரூ.7ஆயிரத்து 122 வங்கியில் இருந்து பெற்று சம்பந்தப்பட்ட குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்னை இனியும் ஏற்படக்கூடாது என்பதற்காக வங்கிக்கணக்கு சித்தையன்கோட்டை ஐஓபிக்கு மாற்றப்பட்டது. மேலும் ஜாயிண்ட் அக்கவுண்டாக இப்ராகிம் பெயரும் சேர்க்கப்பட்டது. கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.1,500 வழங்க வேண்டும். ஆனால் முஜிப்பூர்ரஹ்மானுக்கு மாதம் ரூ.ஆயிரம்தான் வழங்கப்பட்டு வந்தது. எனவே இவற்றை ‘உயர்த்தி வழங்கவும்’ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத உதவித்தொகை உயர்வு, நிறுத்தப்பட்ட உதவித்தொகையும் விடுவிப்பு என்று இரண்டு நன்மையால் இவர்ளின் இருண்ட வாழ்வில் சின்னதாய் ஒளி கிடைத்துள்ளது. இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சிவக்குமார் கூறுகையில், ‘3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள ஜமீலம்மாள் மாத உதவித்தொகை மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ’ என்றார்.

Related Stories: