விதிகளை மீறி பிளக்ஸ் வைத்தால் ஒரு ஆண்டு சிறை அனைத்து கட்சி கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு

பழநி, பிப். 22: தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக வழக்கு எண் 33819 / 18ன் படி சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. இதன்படி டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள் உள்ளிட்டவற்றை நகர பகுதிகளில் எவ்வாறு வைக்க வேண்டும் என்றும், என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வழிகாட்டுதலை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் பழநி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையர் நாராயணன் தலைமை வகிக்க, தாசில்தார் சரவணக்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். திமுக நகரச் செயலாளர் தமிழ்மணி, அதிமுக நகரச் செயலாளர் முருகானந்தம், பாமக மாவட்ட செயலாளர் வைரமுத்து, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சுந்தரம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிளக்ஸ் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாளிற்கு பிறகு பிளக்ஸ் போர்டை அகற்றி கொள்ள வேண்டும். வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் அச்சிட்டவர்களின் முகவரி கட்டாயம் இருக்க வேண்டும்.

உரிய அனுமதியில்லாமல் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் வைப்பவர்களுக்கு 1 வருட சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். வைக்கப்படும் பிளக்ஸ் போர்டில் அனுமதி கடிதத்தின் நகல் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 40 அடியில் இருந்து 60 அடி அகலம் வரை உள்ள சாலையில் அதிகபட்சமாக 10- 16 அடி அளவுள்ள பிளக்ஸ் மட்டுமே வைக்க வேண்டும். 20 அடியில் இருந்து 40 வரை உள்ள சாலையில் அதிகபட்சமாக 8- 5 அடி அளவுள்ள பிளக்ஸ் மட்டுமே வைக்க வேண்டும். 10 அடியில் இருந்து 20 அடி வரை உள்ள சாலையில் 3- 2.5 அடி அளவுள்ள பிளக்ஸ் மட்டுமே வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுங்கட்சியினருக்கு பிளக்ஸ் வைப்பதில் அதிகாரிகள் தாராளம் காட்டுவதாகவும், மற்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகவும் கட்சியினர் புகார் தெரிவித்தனர். பிளக்ஸ் வைக்க கூடாத இடங்களை காவல் நிலையம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் பட்டியலிட வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தினர்.

ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமை வகித்தார். இதில் மேலாளர் முருகராஜ், ஆய்வாளர் வீரபாகு, இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் செயல்அலுவலர் கணேசன் தலைமை வகிக்க தலைமை எழுத்தர் சந்தன மாரியப்பன், காவல் ஆய்வாளர் சேகர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சடகோபி அறிக்கை வாசித்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், அதிமுக நகர செயலாளர் சிவலிங்கம், காங்கிரஸ் முகமதுஅலி, பாஜ செல்வராஜ், மார்க்சிஸ்ட் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா தலைமை வகிக்க, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி வரவேற்றார். இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், திமுக நிர்வாகி செல்வக்குமார், அமமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாராஜன் நன்றி கூறினார்.

Related Stories: