சரளையோடு நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம், பிப். 22: ஒட்டன்சத்திரம் அருகே அரசப்பிள்ளைபட்டியில் சாலை பணியை கிடப்பில் போட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ளது அரசப்பிள்ளைபட்டி. சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் அரசு பஸ் காலை, மாலை என இருவேளைகள் வந்து செல்கிறது. தவிர தனியார் பள்ளி பேருந்துகள் ஊருக்குள் சென்று வருகின்றன. மேலும் இப்பகுதி மக்கள் தங்கள் தேவைக்காக டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இவை பயணிக்கும் அரசப்பிள்ளைபட்டியிலிருந்து அத்தப்பகவுண்டன்புதூர் வரை செல்லும் சாலை கடந்த சில மாதங்களாக சேதமடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தனர். இதை ஒருவழியாக ஏற்று புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலை பணிக்காக சரளை கற்களை பரப்பி சென்றனர். அதன்பின் இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. தற்போது கற்கள் பரப்பிய சாலையால் வாகனங்களை இயக்கவே முடியவில்லை என இப்பகுதியினர் புலம்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: