தேதி முடிந்தும் பெறப்படும் ‘ரூ.2000’ விண்ணப்பங்கள் ஆளுங்கட்சியினர் மிரட்டலுக்கு பணியும் அலுவலர்கள்?

திண்டுக்கல், பிப். 22: திண்டுக்கல்லில் வறுமைக்கோட்டில் உள்ளவர்களுக்கு ரூ.2000 பணம் வழங்குவதற்கான விண்ணப்பம் தேதி முடிந்தும் பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கான விண்ணப்பங்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பெற நேற்று முன்தினம் கடைசி நாளாகும். எனினும் ஆளும்கட்சியினர், விண்ணப்பங்களை மக்களிடம் வழங்கி அதை பூர்த்தி செய்து மொத்தமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அளித்து வந்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள், ‘நாங்கள் பணம் வாங்கி தருகிறோம்’ எனக்கூறி மக்களிடம் விண்ணப்பங்களை விநியோகித்து அதை அலுவலகங்களில் அளித்தனர். தேர்தல் நேரத்தில் இத்திட்டம் அதிமுகவிற்கு பிரசார யுத்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க நேற்று முன்தினமே கடைசி நாளாகும். எனினும் ஆளும்கட்சியினர் மக்களிடம் கட்டு, கட்டாக விண்ணப்பங்களை பெற்று அளித்து வருகின்றனர். விண்ணப்பங்களை வாங்காத அலுவலர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மனோகரனிடம் கேட்டபோது, ‘‘விண்ணப்பங்கள் பெற கால அவகாசம் நேற்று முன்தினமே முடிந்து விட்டது. எனினும் மக்கள் தரும் விண்ணப்பங்களை வாங்கி வருகிறோம். விண்ணப்பங்கள் யார் மூலம் தருகிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது. வறுமைக்கோட்டில் உள்ள பட்டியல்படி பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: