பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 25 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றிவளைப்பு

வேலூர், பிப்.22:வேலூர் சிறையில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதியை திட்டமிட்ட நுண்ணறிவு பிரிவு போலீசார் திருப்பூரில் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர்.கடந்த 1984ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கம்பைநல்லூரில் வாகனத்தில் சென்ற கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதுடன், அவர் வைத்திருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில், கம்பைநல்லூர் ஒயர்மேன் கார்டனை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை கம்பைநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இக்கொலை வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் ரவிச்சந்திரனுக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இதையடுத்து வேலூர் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த ரவிச்சந்திரன் கடந்த 1994ம் ஆண்டு அவரது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் பரோல் காலம் முடிந்தும் சிறைக்கு திரும்பாத ரவிச்சந்திரன் தலைமறைவானார். இதுதொடர்பாக வேலூர் பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்து ரவிச்சந்திரனை தேடி வந்தனர்.இதற்கிடையில் ரவிச்சந்திரன் மாயமான வழக்கு திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கேற்ப திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இலியாஸ், தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனை சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து வேலூர் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: