வாட்ஸ் அப், பேஸ்புக் ஸ்டேட்டஸில் பின்தொடர்ந்து திருடர்கள் கைவரிசை : சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

வேலூர், பிப்.22: வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்பவர்களை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸில் பின்தொடர்ந்து, திருடர்களை கைவரிசை காட்டி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மெயின் பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகை கடை உரிமையாளர்கள், அடகு கடை வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி மற்றும் சைபர் கிரைம் குற்றங்களில் பாதுகாப்பாக இருப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜேசுசுப்பிரமணியன் தலைமை தாங்கினர். நகை கடை உரிமையாளர்கள், அடகு கடை வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக இன்ஸ்பெக்டர் கனிமொழி , சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசியதாவது:எதிர்கால சைபர் கிரைம் குற்றங்களை எதிர்கொள்ள அதிகப்படியான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏடிஎம் மோசடிகள் அதிகளவில் நடக்கிறது. ஸ்கிம்மர் பயன்படுத்தி ஏடிஎம் ரகசியங்களை திருடி வருகின்றனர். சமீபத்தில் குடியாத்தத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நடந்த ஏடிஎம் திருட்டு இதற்கு உதாரணம். எனவே, சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகளை உடனடியாக வங்கிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு செல்லும்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஸ்டேட்டஸ் போடுகிறோம். இதை பின்தொடரும் கும்பல் வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பிடிபட்ட திருடர்கள் இதுபோன்ற அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே, தேவையின்றி ஸ்டேட்டஸ் போடுவதை தவிர்க்க வேண்டும்.‘வெளியூர்களுக்கு சென்றால், போனை கடைகளில் கொடுத்து சார்ஜ் செய்யும்போது, டேட்டா கேபிள் மூலம் தகவல்களை திருடி விடுகின்றனர். எனவே, போனை ஸ்விட்ச் ஆப் செய்து சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.இணையதளங்களில் விளம்பரம் செய்யப்படும் வேலைவாய்ப்பு, பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: