அரசின் உதவித் தொகை கிடைக்காததால் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

வேலூர், பிப்.22:ஊராட்சியில் தயாரிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர் பட்டியலில், அடித்தட்டு மக்களான தங்களின் பெயர் இல்லாததால் அரசின் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று கூறி பெருமுகை கிராம மக்கள் வேலூர் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு ₹2 ஆயிரம் உதவித்தொகை இம்மாத இறுதிக்குள் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏற்கனவே உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் பட்டியலை அடிப்படையாக கொண்டு அரசின் உதவித்தொகைக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஊரகப்பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களின் பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆளுங்கட்சி மற்றும் வசதிப்படைத்தவர்கள் பெயர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்களுக்கு ₹2 ஆயிரம் மறுக்கப்படுவதாகவும் பல்வேறு பகுதிகளிலும் புகார் எழுந்துள்ளது.

அதற்கேற்ப வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் இப்பிரச்னை வெடித்துள்ளது. வேலூர் அடுத்த பெருமுகை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம், அண்ணா நகரில் உள்ள 70க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ₹2 ஆயிரம் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்களின் பெயர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர் பட்டியலில் இல்லை என்பது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேற்று காலை வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர். அங்கு அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களிடம் பிடிஓ பானுமதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘ஊராட்சி செயலரிடம் மனு அளிக்கும்படியும், அதன்பேரில் ₹2 ஆயிரம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும்’ என்றும் கூறினார். இதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: