×

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ2000 வழங்குவதில் குளறுபடி: பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி, பிப். 22. பொன்னேரில் அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதில் குளறுபடி நடப்பதாக கூறி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2  மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னகாவனம் கிராமத்தில் 700 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கும் நலிந்தோர் காண உதவித்தொகை 2000 ரூபாய் தருவதற்கு பட்டியல் எடுக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 700 குடும்பங்களில் வெறும் 70 குடும்பங்கள் மட்டும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக ஏழைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது தெரியவந்தது, கிராம மக்கள் அதிகாரிகளிடம் நேற்று விசாரித்தனர். அப்போது, 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான பட்டியல் ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும், இரண்டாம் பட்டியலில் விடுபட்டவர்கள் மட்டும் எடுப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் பேச்சில் சந்தேகம் இருந்ததால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து சரியான விவரம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள், உதவித்தொகை வழங்கும் பட்டியலை சரிசெய்து வறுமைக் கோட்டில் உள்ள அனைவருக்கும் ரூ2000 வழங்க கோரி பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது, அவர்கள், சின்னகாவனம் கிராமத்திற்கு செல்லும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நூறு ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் சின்னகாவனம் கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர், தகவலறிந்த பொன்னேரி போலீசார் மற்றும் வருவாய்த்துறை, பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடம் வந்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தின் பேரில் கிராம மக்கள் சாலை மறியல் கைவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால், பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,blockade ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...