×

திருவள்ளூர் அருகே தனிநபர் கழிவறை கட்டுவதில் பல லட்சம் முறைகேடு?: 2 ஆண்டுகள் ஆகியும் பணம் வழங்காததால் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

திருவள்ளூர், பிப். 22:திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தில், தனிநபர் கழிவறை கட்டி 2 ஆண்டுகளாகியும், இதுவரை அதற்கான அரசு நிதியை 84 பயனாளிகளுக்கு வழங்கவில்லை. இந்த நிதியில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது கைவண்டூர் ஊராட்சி. இங்கு, தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஒவ்வொரு குடியிருப்பிலும் தனிநபர் கழிவறை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கழிவறை கட்ட ஒவ்வொரு பயனாளிக்கும், ரூ12 ஆயிரம் வீதம் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. இதையடுத்து இக்கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலை முற்றிலும் ஒழித்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2015-16ம் ஆண்டு தனிநபர் கழிவறை கட்ட 84 பயனாளிகள் விண்ணப்பித்தனர். தொடர்ந்து, கழிவறைகளையும் கடன் வாங்கி கட்டி முடித்தனர்.

இவ்வாறு கடன் வாங்கி கழிவறை கட்டி முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை உதவி தொகை யாருக்கும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலர் மற்றும் முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்த ஒரு கிராமத்தில் மட்டும் 84 பயனாளிகளுக்கு சேர வேண்டிய ரூ.10 லட்சத்து 8 ஆயிரம் பணம் பயனாளிகளுக்கு சேரவில்லை. இதேநிலை பல ஊராட்சிகளில் உள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசு நிதி கிடைக்காததால், இதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் இக்கிராமத்தில் திடீர் ஆய்வுசெய்து, தனிநபர் கழிவறை நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிய வேண்டும். மேலும் பயனாளிகளுக்கு உடனடியாக உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. நடவடிக்கை இல்லையேல், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரும் 28ம் தேதி அன்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

Tags : Millions ,Thiruvallur ,
× RELATED நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ்...