×

முகநூலில் நண்பராக பழகி வங்கியில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் பண மோசடி: கராத்தே மாஸ்டர் கைது

ஆவடி: சென்னை புறநகர் பகுதியில் தனியார் வங்கிகளில் உதவி மேலாளர் பணி வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் ரூ12.16 லட்சம் வரை மோசடி செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, மீனாட்சி பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(25). இவர் சென்னை, மதுரவாயல், மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் விரிவு, மாருதி நகர், பத்மநாதன் தெருவை சேர்ந்த ஹரிஷ் குமார்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், ஹரிஷ்குமார் தான் ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், அவர் ராஜமாணிக்கத்திடம் எனக்கு வேறு வங்கிகளில் உள்ள அதிகாரிகள் தொடர்பு உள்ளது. எனவே உங்களுக்கு வங்கியில் உதவி மேலாளர் பணி வாங்கி தருகிறேன். அதோடு, உங்களுக்கு தெரிந்தவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். அவர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

ஹரிஷ் குமார் ஆசை வார்த்தைகளை நம்பிய ராஜமாணிக்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், ரூ2.77 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதேபோல, இவர் சென்னையை சேர்ந்த திவ்யா, பூபேஷ், சுசித்ரா ஆகியோரிடமும் தலா ரூ.3 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இவ்வாறு, ஹரிஷ் குமார் 4 பேரிடம் சேர்த்து ரூ12.16 லட்சம் வரை பணம் பெற்று உள்ளார். ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கித் தராமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், பணத்தை திரும்ப கேட்ட போதும் ஹரிஷ்குமார் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து ராஜமாணிக்கம் அம்பத்தூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் போர்க்கொடி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஹரிஷ் குமாரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் கூறப்படுவதாவது: ஹரிஷ் குமார், 12ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கராதே மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது முகநூல் மூலமாக பல வாலிபரிடம் பழகி அவர்களை பயோ டேட்டாக்களை வாங்கி பின்னர், அவர்களுக்கு தனியார் வங்கிகளில் உயரதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று மாலை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவர் மீது புகார்கள் தொடர்ந்து வந்தால், நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Tags : Karat ,master ,
× RELATED நேரடியாக எதிர்க்க முடியாமல் போலி...