×

குமரி மாவட்ட பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளரின் நெல்லை வீடு, வங்கி லாக்கரில் ₹7.17 லட்சம், 312 பவுன் நகை பறிமுதல்

நாகர்கோவில், பிப். 22: குமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருபவர்  மாலதி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், அலுவலகத்தில் இருந்தபோது, அவரிடம் இருந்து கணக்கில் வராத ₹1 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அரசு பணிகள் டெண்டர் விடுவது சம்பந்தமாக லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்தது.
அதன்படி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த மாடசுவாமி சுந்தர்ராஜை (48) லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்காணித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாடசுவாமி சுந்தர்ராஜ் பணி முடித்து இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது கலெக்டர் அலுவலக வாசல் அருகே, அவரை வாகனத்துடன் மடக்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர் மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரது வாகனத்தில் இருந்து கணக்கில் வராத ₹4.9 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக அவரது சொந்த ஊரான நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீடு, வங்கி லாக்கரை சோதனை செய்ய டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மாடசாமி சுந்தர்ராஜின் வீடு, வங்கி லாக்கர்களில் சோதனையிட நீதிமன்றம் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன் அனுமதி பெற்றனர். கடந்த 19ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி மறுநாள் (நேற்று முன்தினம்) காலை 10 மணி வரை இந்த சோதனை நீடித்தது. அப்ேபாது  மாடசுவாமி சுந்தர்ராஜ் வீட்டில் 150 பவுன் நகைகள் மற்றும் வங்கி லாக்கரில் 162 பவுன் என்று மொத்தம் 312 பவுன் நகைகள், ₹7 லட்சத்து 17 ஆயிரத்து 600 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வங்கியில் உள்ள 2 லாக்கர்களில் தான் இந்த சோதனை நடத்தி அதிகாரிகள் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி லாக்கரின் சாவி தொலைந்து போய்விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரது வங்கி லாக்கருக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சீல் வைத்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஐஓபி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் மொத்தம் 13 வங்கி கணக்குகள் இவருக்கு உள்ளது கண்டறியப்பட்டது.
மேலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் விசாரணையில் மாடசுவாமி சுந்தர்ராஜ் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பலருக்கு கடன் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த கடன் தொகை சுமார் ₹2 கோடி வரை இருக்கும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் அரசு துறை வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Tags : Kumari ,district panchayats assistant executive ,house ,Nellai ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...