தாம்பரம், பெருங்களத்தூரில் ரூ6.60 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே புதிய சுரங்கப்பாதைகளை அனுமதியின்றி திறந்த அதிமுகவினர்: தொடங்கியது நாடாளுமன்ற தேர்தல் ஜூரம்

தாம்பரம்: தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் ரூ6.60 கோடியில் கட்டப்பட்ட புதிய சுரங்கப்பாதைகளை ரயில்வே அதிகாரிகளின் அனுமதியின்றி அதிமுகவினரே தன்னிச்சையாக திறந்து வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்து ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் பஸ் நிலையம், ரயில் நிலையம், மேற்கு தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அதேபோல் மேற்கண்ட பகுதிகளில் இருந்து கிழக்கு தாம்பரத்துக்கும் தினசரி ஆயிரக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்காக சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்துதான் செல்லும் நிலை இருந்தது. எனவே, இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாம்பரம் பகுதியில் மட்டும் வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது.

அதேபோல், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் இருந்து ரயில்வே கேட்டை கடந்து தான் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இதனால், அடிக்கடி ரயில் மோதி உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. எனவே, மேற்கண்ட இரு பகுதிகளிலும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தம்பரம் பகுதியில் ரூ3.20 கோடியிலும், பெருங்களத்தூர் பகுதியில் ரூ3.40 கோடியிலும் என மொத்தம் ரூ6.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு, சமீபத்தில் முடிக்கப்பட்டது.  இந்நிலையில், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர்  பகுதியில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகளை  ரயில்வே அதிகாரிகளின் அனுமதியின்றி அதிமுக ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமசந்திரன், காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உட்பட சில அதிமுகவினர் நேற்று காலை  தன்னிச்சையாக திறந்து வைத்தனர். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமெனில், ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அதிமுகவினர் அவசர கதியில் சுரங்கப்பாதைகளை திறந்து வைத்துள்ளனர். இதில் ரயில்வே அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,’’ என்றனர்.

விளம்பரம்

சுரங்கப்பாதை திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக தாம்பரம் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து மாணவர்களை வரவழைத்து வந்திருந்தனர். இதேபோல், மினி வேன்களில் ஆண்கள், பெண்கள் என பலரையும் அழைத்து வந்து அதிமுகவினர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

Related Stories: