செருப்பில் மறைத்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ13.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: சென்னை வாலிபர் கைது

சென்னை: சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து கடத்த முயன்ற ரூ13.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் விமானம் நேற்று காலை 9.50 மணிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது கவுஸ் (34) என்பவர், இந்த விமானத்தில் சுற்றுலா பயணியாக துபாய் செல்ல வந்தார். அவரது உடமைகளை ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால், முகமது கவுஸ் பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால், சுங்க அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதனை செய்தனர். அப்போதும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, அவரை அடுத்தக்கட்டமாக குடியுரிமை சோதனை பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
Advertising
Advertising

அப்போது, முகமுது கவுஸ் அடிக்கடி குனித்து தான் காலில் அணிந்திருந்த புத்தம் புதிய செருப்பை பார்த்துக் கொண்டே இருந்தார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை மீண்டும் சுங்க சோதனை பகுதிக்கு  அழைத்து வந்து அவருடைய செருப்புகளை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த செருப்பில் ரகசிய அறை செய்து, அதில் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. 2 செருப்புகளிலும் 190 அமெரிக்க கரன்சிகள் இருந்தன. ஒவ்வொரு கரன்சியும் 100 டாலர் மதிப்புடையது. இந்திய மதிப்புக்கு ரூ13.5 லட்சம். இதையடுத்து, முகமது கவுஸை அதிகாரிகள் கைது செய்தனர். அதோடு அந்த வெளிநாட்டு பணத்தையும், செருப்புகளையும் பறிமுதல் செய்தனர். பொதுவாக நமது நாட்டில் பணத்தை பய பக்தியோடு பாக்கெட்டிலோ, பெட்டியிலோ வைத்து எடுத்து செல்வது வழக்கம்.

ஆனால் இந்த வாலிபர், காலில் அணியும் செருப்புக்குள் வைத்து கடத்த முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இவர் சிங்கப்பூர், துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா பயணியாக சென்று வந்திருக்கிறார் என தெரியவந்தது. எனவே, ஏற்கனவே இதுபோல் பணத்தை கடத்தி இருக்கிறாரா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் கணக்கில் இல்லாத கருப்பு பணம் எனவும் தெரியவந்தது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட டாலர்களை கொடுத்தது யார், யாரிடம் கொண்டு போய் சேர்க்க இருந்தார்? என அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: