×

ஏரி ஆக்கிரமித்து செய்த பயிர்களுக்கு இலவச மின்சாரத்தில் தண்ணீர்

திருவள்ளூர், பிப். 21: ஏரிகளை ஆக்கிரமித்து பயிர் செய்யப்படும் நிலங்களுக்கு, பணத்தை பெற்றுக்கொண்டு இலவச மின்சாரத்தில் சில விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருவதால் ஏரி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரு
கிறது.ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசு சட்டம் இயற்றியும், அகற்றாததாலும், ஏரியின் மதகுகள் பராமரிக்கப்படாததாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறை பராமரிப்பில் 787 ஏரிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 649 ஏரிகள் உள்ளன. தவிர, 2,000க்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளன.

ஏரியை ஆக்கிரமித்து பலர் சொந்த நிலம்போல விவசாயம் செய்துவருகின்றனர். மழைக்காலங்களில்  பயிர்களை காக்க ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சமீபத்தில் பெய்த மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் ஒன்றியம் புல்லரம்பாக்கம் ஏரி. செஞ்சி ஏரி, கூவம் ஏரி உட்பட பல ஏரிகளில் அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். ஏரிக்குள் வாகனங்கள் செல்ல கரையையும் உடைத்துள்ளனர்.ஏரிகளை ஆக்கிரமித்து பயிர் செய்யப்படும் நிலங்களுக்கு, அருகில் பம்ப் ஷெட் வைத்துள்ள விவசாயிகள் சிலர், ‘’ஏக்கருக்கு இத்தனை மூட்டை நெல் அல்லது குறிப்பிட்ட தொகையாக பணம்’’ என ஒப்பந்தம் செய்துகொண்டு, அரசு வழங்கும் இலவச மின்சாரத்தில் நீர் பாய்ச்சி வருகின்றனர்.

இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிகளை ஆக்கிரமித்து பயிரிட்டு வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலங்கள், ஏரிகளை ஆக்கிரமித்துள்ள நிலங்களுக்கு, இலவச மின்சாரத்தில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதை மின்வாரியம் தடை செய்ய வேண்டும். அப்போதுதான், ஆக்கிரமிப்புகளை தானாக அகற்றுவார்கள்’ என்றனர்.

Tags : lakes ,lake ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...