3 முறை ஒத்தி வைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட் ரூ.1.80 கோடிக்கு ஏலம்

ஈரோடு, பிப். 21:  ஆளும் கட்சியினரின் தலையீட்டால் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஏலம் நேற்று நடந்தது. இதில் அதிகபட்சமாக ரூ.1.80 கோடிக்கு ஏலம் போனது.

  ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுங்க கட்டணம் வசூல் தொடர்பாக 3 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்பட்டு வருகிறது. அதன்படி 3 ஆண்டு முடிவடைந்த நிலையில் அடுத்த 3 ஆண்டிற்கான ஏலம் கடந்த 7ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் 10 பேர் கலந்து கொள்ள டெபாசிட் பணம் செலுத்தியிருந்தனர். ஆனால், அதிமுக.,வினரின் தலையீடு இருந்ததால் இந்த ஏலம் மீண்டும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 15ம் தேதி ஏலத்தை நடத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருந்த நிலையில் மீண்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அதிமுக.,வை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில் மீண்டும் இதற்கான ஏலம் 3வது முறையாக 20ம் தேதி நடத்த தள்ளி வைக்கப்பட்டது.    இதனை தொடர்ந்து நேற்று 3வது முறையாக ஏலம் நடத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஏலத்தில் கலந்து கொள்ள 9 பேர் தலா ரூ.40 லட்சம் டெபாசிட் செலுத்தியிருந்தனர். கடந்த முறை விடப்பட்ட ஏலத்தில் இந்த மார்க்கெட் ரூ.99.30 லட்சத்துக்கு ஏலம் போனது.

ஆனால் இந்த முறை ஏலத்திற்கு கடுமையான போட்டி நிலவியதால், அதிமுக ஆதரவு பெற்றவர்களும் கலந்து கொண்டு ஏலத்தை எடுக்க முடிவு செய்திருந்தனர். ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு அதிக அளவு வருவாயை ஈட்டி தரும் இந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஏலம் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் (வருவாய்) குமரேசன் தலைமையில் நடந்தது.

  இந்த ஏலத்தில் ஆரம்பத்தில் இருந்தே போட்டி கடுமையாக இருந்தது. இதில் ஏலத்தின் முடிவில் அதிகபட்சமாக ஏலத்தொகையாக ரூ.ஒரு கோடியே 80 லட்சத்துக்கு அருண்பிரசாத் என்பவர் ஏலத்தை கோரினார்.

அதற்கு பிறகு யாரும் ஏலம் எடுக்க முன்வராத நிலையில், அருண்பிரசாத்திற்கு ஏலம் முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஏலத்தில் 99.30 லட்சத்திற்கு ஏலம் போன நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டை இந்த முறை நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.1.80 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதுதவிர ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள 6ம் நம்பர் பூக்கடை ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.

  மேலும் பெரியசேமூர் எம்.ஜி.ஆர்.நகர் கட்டண கழிப்பறை ரூ.52 ஆயிரத்து 100க்கும், கங்காபுரம் மீன்குட்டை ரூ.14 ஆயிரத்து 200க்கும், பழைய பெரியசேமூர் நகராட்சியில் உள்ள சாலையோர மரங்கள் ரூ.3 ஆயிரத்து 780க்கும் ஏலம் விடப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட ஏலத்தில் ஏலம் போன அனைத்து இனங்களும் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் தலைமையிலான கவுன்சில் குழுவிற்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு பிறகு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏலதாரர்களுக்கு விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது, தொடர்பாக நடத்தப்பட்ட ஏலம் ரூ.ஒரு கோடியே 80 லட்சக்கு போயுள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.1.80 கோடி செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டும், அதற்கு அடுத்த ஆண்டும் 5 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும். இதுதவிர 18 சதவீதம் ஜிஎஸ்டி., வரி செலுத்த வேண்டும். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.17 லட்சத்து 59 ஆயிரத்து 800 வீதம் 3 ஆண்டுக்கு சேர்த்து செலுத்த வேண்டும். தற்போது ஏலம் விடப்பட்டுள்ள அனைத்து இனங்களும் ஆணையாளர் தலைமையிலான கவுன்சில் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் ஏலதாரர்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.   மேலும் இந்த ஏலத்தை எடுக்க அதிமுக, திமுக.,வினர் வந்திருந்தனர்.இதனால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாதவாறு தடுக்க இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: