பவானிசாகர் அணையிலிருந்து 3ம் சுற்று தண்ணீர் நாளை திறப்பு

சத்தியமங்கலம், பிப். 21:     தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகள் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் புன்செய் பாசனத்திற்கு நிலக்கடலை, எள் மற்றும் தீவன சோளம் பயிரிடுவதற்காக 5 சுற்றுகளாக 67 நாட்களுக்கு ஜன.7 முதல் ஏப்.30 வரை முறை விட்டு தண்ணீர் திறக்க கடந்த ஜனவரி மாத முதல் வாரத்தில் உத்தரவிடப்பட்டு அதன்படி முதல் சுற்று தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி விநாடிக்கு 2300 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.  இந்நிலையில் முதல் சுற்று தண்ணீர் கடந்த ஜன.22ம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2ம் சுற்றுக்கு பிப்.1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு 13ம் தேதி வரை விடப்பட்டு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 3ம் சுற்று தண்ணீர் நாளை (22ம் தேதி) திறக்கப்பட்டு மார்ச் 5ம் தேதி வரை விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.76 அடியாகவும், நீர் இருப்பு 16.6 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 463 கன அடியாகவும் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 1300 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: