கோடை வெயில் தாக்கம் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் பாம்புகள்

ஈரோடு, பிப். 21: ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக வெயிலின் உஷ்ணம் தாங்காமல் புதர்களில் வாழும் பாம்புகள் குளிர்ச்சியான பகுதியை தேடி வெளியே வருகின்றன. இந்த பாம்புகள் பெரும்பாலும் கழிவு நீர் சாக்கடைகள் வழியாக குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதில் ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகர் பகுதியில் வசிக்கும் சண்முகம் (30) வீட்டில் நேற்று ஐந்தரை அடி நீளமுள்ள நாகப்பாம்பு நுழைந்தது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து பாம்பு பிடி வீரர் யுவராஜ்க்கு தகவல் தெரிவித்தார்.   இதையடுத்து அவர் சண்முகம் வீட்டிற்குள் நுழைந்த நாகபாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டார். பிடிபட்ட பாம்பை யுவராஜ் ஈரோடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதேபோல் நேற்று முன்தினம் ஈரோடு மூலப்பாளையம் மாருதிகார்டன் பகுதியில் ரங்கநாதன் என்பவர் வீட்டில் புகுந்த பச்சை பாம்பு பிடிப்பட்டது. இந்த பாம்பை வனப்பகுதிக்குள் விடப்பபட்டது.

இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறியதாவது:

கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பாம்புகள் வெயில் தாங்காமல் குளிர்ச்சியான பகுதியை தேடியும், மயில், கீரி போன்றவைகளுக்கு பயந்து வெளியே வருகின்றன.

அப்போது அவைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குறிப்பாக சுவர் ஓரங்களில் தேவையில்லாத பொருட்களை வைக்காமல் இருக்க வேண்டும். பாத்ரூமில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளை பயன்படுத்தி முடித்த பின் பாம்புகள் நுழையாத மாதிரி கல் அல்லது கட்டைகளை வைத்து அடைக்க வேண்டும், என்றார்.

Related Stories: