புதிய சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: மாத்தூர் 200 அடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  மணலி மாத்தூர் அருகே மாதவரம் 200 அடி சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுங்கச்சாவடி அமைக்க கூடாது என லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. முடிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கட்டுமானப்பணி முடிவடைந்து சுங்கச்சாவடி நேற்று முதல் இயங்க தொடங்கியது. இதற்கு லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடி அருகே நேற்று 2வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், சென்னை லோக்கல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் வெங்கடபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தினர் கலந்துகொண்டு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.  பின்னர் சாலை மறியல் செய்ய முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: