வீடு, வணிக நிறுவனங்களில் சேரும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 கோட்டங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக 19,158 தூய்மை பணியாளர்கள் 5,482 மூன்று சக்கர மிதிவண்டிகள், 14,500 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள், 301 காம்பேக்டர் (கனரக மற்றும் இலகுரக), 22 டாரஸ் கனரக வாகனங்கள், 16 இயந்திர பொக்லைன்கள், 72 ஸ்கிட் லோடர் இயந்திரங்கள், 23 முன் பளுதூக்கும் லோடர்கள் மூலமாக 2,322 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் மற்றும் 3,078 மக்காத குப்பைகள் என தினந்தோறும் சுமார் 5,400 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் குறிப்பிட்ட அளவிலான மக்கும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, 176 மையங்களில் உரம், எரிவாயு மற்றும் மின்சார சக்தியாக மாற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் 365 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 64 சிறுதுகள் களாக்கும் இயந்திரங்களின் மூலமாக தூளாக்கப்பட்டு தார்சாலைகள் அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களில் சேகரமாகும் உணவு கழிவுகள், மாமிச கழிவுகள், தோட்டக்கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக், கண்ணாடி, தோல் பொருட்கள், இரும்பு கழிவுகள், ரப்பர் பொருட்கள் போன்ற மக்காத குப்பைகளை தனியாகவும், வெடிபொருட்கள், இரசாயனப் பொருட்கள், மருத்துவக் கழிவுகள் போன்ற நச்சுக்கழிவுகளை தனியாகவும் தரம் பிரித்து வீடுகள்தோறும் வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.எனவே, பொதுமக்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரித்து மறுசுழற்சி செய்யும் வகையிலும், நச்சுத்தன்மையுடைய குப்பைகளை தரம்பிரித்து அவற்றை பாதுகாப்பான முறையில் அழிக்கும் வகையிலும் மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: