குஜராத்தில் இருந்து சென்னைக்கு வேன்களில் கடத்தி வந்த 5 டன் குட்கா பறிமுதல்: டிரைவர்கள் இருவர் கைது

சென்னை: குஜராத்தில் இருந்து சென்னைக்கு 2 வேன்களில் கடத்தி வந்த சுமார் 5 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் டிரைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.   பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் பகுதியில் உள்ள சந்திப்பில் ஒரு வேனில் இருந்து மற்றொரு வேன் மற்றும் மினி லாரிக்கு குட்கா பொருட்கள் மாற்றப்படுவதாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 வேன் மற்றும் மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது 5 டன் எடையுள்ள 70 மூட்டை குட்கா மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேன் டிரைவர்கள் குஜராத்தை சேர்ந்த ஜோதிந்திர தேவ் (44), மிசான் பாவேஸ்தான் (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், குஜராத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து தமிழகம் முழுவதும் வினியோகம் செய்து வந்ததும், குடோனில் பதுக்கி வைத்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் வேன் அல்லது லாரியில் சுற்றி வந்து வேறு வாகனங்களில் மாற்றி விடுவதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, 2 வேன் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: